புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 60 சதவீத மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 40 சதவீத மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் இல்லாததால் தடுப்பூசி போடாத சூழ்நிலை உள்ளது. இதனால் இனி தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே கரோனா நோய்ப் பரவல் காரணமாக தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியிலும் நோய்த்தொற்று பரவல் காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.