கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்தார். ஏற்கனவே 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு. முதல்வர் எடியூரப்பா நாளை காலை 10.00 மணியளவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ள நிலையில், சபாநாயகர் அதிரடி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்டது. அதில் பாஜகவிற்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா எளிதில் வெற்றி பெறுவார். தமிழகத்தை பின்பற்றி இது போன்ற நடவடிக்கையை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் எடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.