அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பலவற்றிற்கு ஆதாரைக் கட்டாயமாக்கி இருப்பது குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், ஐ.பி.எல். டிக்கெட்டுகள் வாங்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், மேரா ஈவண்ட்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் வாயிலாக மாதவி குர்ரம் என்பவர் டிக்கெட் வாங்க முயற்சி செய்தபோது, ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவிடவேண்டும் என கேட்டதால் அதிருப்தி அடைந்துள்ளார். அரசு சார்ந்த விவகாரங்கள் என்றால் சரி.. ஐ.பி.எல். போட்டிகளுக்கும் ஆதார் கட்டாயம் என்றால் என்ன செய்வது? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
டிக்கெட் விற்பனையில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்காகவே ஆதார் எண் கேட்கிறோம். ஆதார் எண் பாதுகாப்பிற்காக மட்டுமே; அதை என்கிரிப்ட் செய்து பத்திரமாக வைத்துக்கொள்வோம் என மேரா ஈவண்ட்ஸ் விளக்கம் அளித்தது. ஆனால், மைதானத்திற்குள் ஆதார் குறித்த எந்தவித சோதனைகளுக்கும் வாய்ப்பில்லை. ஆதார் எண் கேட்பதற்கான தேவை என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுவதற்கு இதுவொன்றே போதுமானது.
‘சிம் கார்டுகள் வாங்கவே ஆதார் தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதாரைக் கட்டாயமாக்குமாறு சட்டம் சொல்கிறது. ஆனால், சில விஷயங்களில் அதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. தனிநபரின் தகவல்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்த குழப்பங்களுக்கு இடமில்லாமல் போகும்’ என இணையதள ஆராய்ச்சியாளர் ஸ்ரீனிவாச கோடாலி தெரிவித்துள்ளார்.