இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவருகிறது. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் கரோனா மூன்றாவது அலை தொடங்கும் எனவும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கரோனா இரண்டாவது அலையின்போது கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து, இன்று (09.07.2021) பிரதமர் மோடி, நாட்டில் ஆக்சிஜன் இருப்பு குறித்தும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, "நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட 'பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன்' ஆக்சிஜன் ஆலைகள் வரவுள்ளன. பி.எம். கேர்ஸ் நிதி மூலம் பங்களிக்கப்படும் இந்த ஆக்சிஜன் ஆலைகள், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும்" என தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருவதை உறுதிசெய்யுமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.