மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சியில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் உள்ளிட்ட பலரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பவார், உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசாங்கம் ஒட்டுக்கேட்டதாக மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் யாருடைய உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படவில்லை என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைப்பதாகவும், ஆறு வாரங்களில் அவர்கள் இது தொடர்பான விசாரணையை நிறைவு செய்வார்கள் எனவும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். தங்களது பழைய கூட்டணிக் கட்சிக்கு எதிராக சிவசேனா அமைத்துள்ள இந்த விசாரணைக் குழு, பாஜகவிற்கு அரசியல் ரீதியிலான நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.