மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் ரதி (48). இவர், பஞ்ச்வதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கைலாஷ் ரதி, கடந்த 23ஆம் தேதி அன்று இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த மருத்துவமனைக்குள் அத்துமீறி ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து, மறைந்திருந்து கைலாஷ் ரதியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கைலாஷ் ரதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கைலாஷ், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், அங்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வருவதை உணர்ந்த அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கைலாஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தாக்குதல் நடத்திய அந்த நபர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியரின் கணவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில், மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் முன்னாள் ஊழியர் 12 லட்ச ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததால் சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மனைவியை வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்த கணவர், மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து மருத்துவரை அரிவாளால் 18 முறை சரமாரியாக வெட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.