இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதேபோல், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அத்துடன், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, கரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை உன்னிப்பாகக் கவனித்து வரும் மத்திய அரசு, அவ்வப்போது மாநில அரசுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (13/01/2022) மாலை 04.40 மணிக்கு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைக் குறித்து கேட்டறியும் பிரதமர், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசிகள் போடும் பணிகள், அடுத்து எது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.