‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நேரத்தில் மற்றொரு அதிர்ச்சி தரும் விதமாகச் சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஜனநாயக அமைப்பு மற்றும் அரசியலமைப்பு ஆகியவை ஏற்கனவே கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. அந்த அச்சுறுத்தலை மேலும் கடுமையாக்குவதற்கு சங்பரிவாரம் எழுப்பிய முழக்கம் தான் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’. தங்களுக்கு சாதகமில்லாத மாநில அரசுகளை குறுக்குவழி மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தான் இது.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் ஏற்படும் தோல்வி பயத்தில் தான் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டால், அது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை பாதிக்கும். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற அரசியல் யதார்த்த உண்மையால் சங்பரிவார் பீதியடைந்து இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பா.ஜ.க.வின் செயல் திட்டம் மத்தியில் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக அமையும். இதனால், மாநில அரசுகளின் தனித்துவமான செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படும். இதற்கு எதிராக ஜனநாயகவாதிகள் களம் இறங்க வேண்டும். சங்பரிவார் அமைப்புகள், மத்திய அரசிற்கு அனைத்து ஆதிக்க அதிகாரத்தை வழங்குவதற்காக கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டி ஒரு மறைமுகமான செயல் திட்டத்தைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.