நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை இணைக்கும் திட்டத்தில் செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 15ம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இந்த ரயில், நாட்டின் 8வது வந்தே பாரத் ரயிலாகும். இந்நிலையில், செகந்திராபாத்தில் இருந்து கிளம்பிய ரயில் ராஜமகேந்திரவரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளது. அப்போது அந்த ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்த ராமலு ரெட்டி என்ற நபர் வந்தே பாரத் ரயிலை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அடடடடா... இது ட்ரைனா.. இல்ல ஃப்லைட்டா.. இவ்வளவு பளிச்சுனு இருக்கே என வந்தே பாரத் ரயிலை தொட்டு பார்த்து அசைந்துள்ளார்.
அதோடு விட்டுவிடாமல் திடீரென ரயிலுக்குள் நுழைந்த ராமலு, சும்மா வளச்சி வளச்சி செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது, ராமலு தான் எடுத்த செல்பிகளை பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த ரயில் கிளம்பியுள்ளது. இதையடுத்து, அவசர அவசரமாக ராமலு கீழே இறங்க முயன்றபோது, வந்தே பாரத் ரயிலில் இருப்பது ஆட்டோமெட்டிக் கதவு என்பதால் அது தானாகவே மூடிக்கொண்டது. இதனால் பதற்றம் அடைந்த ராமலு, ரயிலின் ஒவ்வொரு கதவாக ஓடி ஓடிச் சென்று திறக்க முயன்றுள்ளார்.
அப்போது, சரியான நேரத்திற்கு வந்த டிடிஆர், ராமலுவை பார்த்து “இங்க என்ன பண்ணீட்டு இருக்கீங்க, உங்க டிக்கெட் எங்க?” எனக் கேட்டுள்ளார். இதனால், பதற்றமடைந்த ராமலு, “சார் டிக்கெட்டெல்லாம் இல்ல சார். சும்மா ஒரு செல்பி எடுக்க வந்தேன். ஆனா அதுக்குள்ள இந்த கதவு மூடிக்கிச்சி. தயவு செய்து உதவுங்க” எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட டிடிஆர், இது ஆட்டோமெட்டிக் டோர் என்று விவரித்து அறிவுரை கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறியதற்காக 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும், வந்தது வந்துட்டீங்க. ஒரு 190 கிலோமீட்டர் வந்துட்டு போங்க என அடுத்த ஸ்டாப்பான விஜயவாடாவில் இறக்கிவிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
- சிவாஜி