இந்தியா முழுவதும் 70-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற ஆளுநர் பங்கேற்க கொடியேற்ற நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் புறக்கணித்ததால், மக்கள் யாரும் இல்லாத காலி மைதானத்தில் ஆளுநர் கும்மணம் ராஜசேகர் கொடியேற்றி உரையாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டம் 1955ல் சில திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அதன்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக மிசோரம் மாநிலத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சியை மக்கள் புறக்கணித்தனர். இதனால் மக்கள் யாரும் இல்லாத காலி மைதானத்தில் அணிவகுப்புகள் நடத்தப்பட்டு ஆளுநர் கொடியேற்றி உரையாற்றினார்.