பொருளாதாரத்தை மீட்பதை விடுத்தது நாளேடுகளுக்கு தலைப்புச் செய்தி கொடுப்பதிலேயே மத்திய அரசு ஆர்வமாக இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல், நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இதனால் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், சிறு, குறுந்தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, 2020 - 2021 நிதியாண்டில், முதல் இரண்டு காலாண்டுகளிலும் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ப.சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "நடப்பு நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸில் சென்றுள்ளது. மீதமுள்ள 2 காலாண்டுகளும் இதேபோன்று மைனஸில் செல்லவே வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்ய முறையான திட்டங்கள் மத்திய அரசிடம் இல்லை. பொருளாதார மந்தநிலை குறித்த அறிக்கையிலிருந்து மக்களை திசை திருப்பும் செயல்களிலும், நாளேடுகளுக்கு தலைப்புச் செய்தி கொடுக்கவும் மட்டுமே மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. விவசாயிகளுக்கு நியாயமான, ஊக்கம் தரும் விலையை அளித்தல், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை மக்கள் கையில் பணம் வழங்குதல், அமைப்பு சார்ந்த தொழில்களில் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குதல், மாநில அரசுகளுக்கு அதிகமான நிதி வழங்குதல் ஆகியவையே பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தும். எனவே, நடப்பு நிதியாண்டில் பொருளாதாாரத்தை மீட்சிக்குக் கொண்டு வருவதே விருப்பத்துடன் கூடிய பிரார்த்தனையாக மட்டுமே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.