
நடிகர் ரஜினிகாந்த் – லதா தம்பதிக்கு திருமணமாகி 44 ஆண்டுகளாகிறது. அவர்களின் திருமண நாளான பிப்ரவரி 26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர் மன்றத்தினர் கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். பிப்ரவரி 26ஆம் தேதி சிவராத்திரி என்பதால் 25ஆம் தேதியே கோவில்களில் சிறப்பு பூஜை, தேர் இழுத்தல், அன்னதானம் வழங்குதல் எனச் செய்யத் துவங்கினர்.
வேலூர் ஒருங்கிணைந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் இருநூறு ரசிகர்கள், மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதோடு அங்குள்ள தங்கத்தேர் இழுத்ததோடு, பெண்களுக்கு இலவச சேலை, மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு போன்றவற்றை வழங்கினர், மற்ற மாவட்டங்களில் அன்னதானங்கள் வழங்கினர். இப்படி தங்கள் தலைவரின் திருமண நாளை கொண்டாடினர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். கட்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக செய்தனர். ரஜினி மக்கள் இயக்கத்துக்கான உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் திடீரென பரவிய கொரோனாவால் தனது உடல்நிலையை காரணம் காட்டி 2020 டிசம்பர் 29ஆம் தேதி அரசியல் கட்சி துவங்கவில்லை, எனது ரசிகர்கள் அவரவர் விரும்பிய கட்சிகளில் பயணிக்கலாம் ரஜினி என அறிவித்தார். இது அவரது ரசிகர்களை பெரிதும் பாதித்தது, மனத்துயரத்துக்கு ஆளாக்கியது.

சுமார் 25 வருடங்களாக இந்த தேர்தல்.. அடுத்த தேர்தல்... வரும் தேர்தலின் போது அரசியலுக்கு ரஜினி வருவார் என அவரது ரசிகர்கள் நம்பியிருந்தனர். 25 வருடங்கள் கடந்தே அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. அடுத்தடுத்த அரசியல் கட்சிக்காக தீவிரம் காட்டிவந்த சமயத்தில், தான் அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவை அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். அரசியல், பதவி ஆசை இருந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் பலர் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து அக்கட்சிகளின் நிர்வாகிகளாக, எம்.எல்.ஏக்களாக மாறினார்கள். ஆனாலும் பெரும்பாலான ரசிகர் மன்ற நிர்வாகிகள் இப்போதும் ரஜினி ரசிகர்களாகவே உள்ளனர்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து திமுக என்கிற கட்சியில் இணைந்து பின்னர் திமுகவை பிளந்துகொண்டு சென்று தனிக்கட்சி கண்டு முதலமைச்சர் பதவியில் மூன்று முறை அமர்ந்தவர் எம்.ஜி.ஆர். இன்றும் அவரது பிறந்தநாள், மறைவு நாளை அவரது முன்னாள் ரசிகர்கள் இன்றைய அதிமுக அரசியல் தொண்டர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இது அரசியல்கட்சி தலைவர் என்கிற எல்லையை தாண்டி அவர் மீது வெறிகொண்ட ரசிகர்களே இதனை செய்துகொண்டும் இருக்கின்றனர். எம்.ஜி.ஆர்க்கு பிறகு அப்படியொரு ரசிகர் பட்டாளம் ரஜினிக்கு வாய்த்திருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கினாலும் அவர் பின்னால் நிற்கிறார்கள், அரசியல் கட்சி வேண்டாம் என்றாலும் அவரின் பின்னால் நிற்கிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களை கொண்ட ரஜினி தன் ரசிகர்களுக்கு என்ன செய்துள்ளார் என்கிற கேள்வி இப்போதும் எழுகிறது.
இதுபற்றி ரஜினியின் தீவிர ரசிகர்களிடம் பேசியபோது, தலைவர் கட்சி ஆரம்பிக்க வேண்டிய வயதில் கட்சி தொடங்கவில்லை. காலம் கடந்து கட்சி தொடங்க முடிவு செய்தபின் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டார். ஆனாலும் அரசியலை விட்டு அவர் விலகவில்லை, அவரை சுற்றியும் அரசியல் நடக்கிறது. அதே நேரத்தில் சினிமாத்துறையில் ரஜினிக்கு போட்டியாளர் என்றால் அது கமல் தான். அவர் அரசியல் கட்சி துவங்கியபின், ரஜினிக்கு போட்டியாளர் தான் என நினைத்துக்கொண்டு நடிகர் விஜய் செயல்பட துவங்கினார். தென்னிந்திய சினிமாவில் இப்போதும் ஹீரோவாக நடித்துக்கொண்டு வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது எங்கள் தலைவர் தான். தமிழ்நாட்டை தாண்டினால் எங்கள் தலைவருக்கு இருப்பதுபோல் விஜய்க்கு மாஸ் கிடையாது. ஆனால் நான் தான் வசூல் சக்கரவர்த்தி, சூப்பர் ஸ்டார் எனச் சொல்லிக் கொண்டு, எங்கள் தலைவரை நேரடியாக சீண்டினார். அவரது ரசிகர்களும் இணையத்தில் எங்களை விமர்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பிறந்தநாளோ, திருமண நாளோ, இறப்பு நாளோ, நிறுவனங்கள், கட்சிகளின் தொடக்கவிழாவோ எதுவாக இருந்தாலும் அடுத்த ஆண்டு அதே தேதியில் தான் கொண்டாடுவார்கள். திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என எந்த கட்சியாக இருந்தாலும் அதே தேதியில் தான் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் கட்சி தொடங்கியது 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி. அந்த கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவை அந்த நாளில் தான் கொண்டாடி இருக்கவேண்டும். ஆனால் அதனையெல்லாம் தாண்டி 15 நாள் கடந்து எங்கள் தலைவரின் திருமண நாளின்போது. அந்த கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்கவிழாவை ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் நடத்துகிறார். இது எங்கள் தலைவரின் திருமண நாளை இருட்டடிப்பு செய்யவே இப்படி செய்கிறார். எங்கள் தலைவர் கட்சி தொடங்கியிருந்தால் விஜய் இப்படி எங்கள் தலைவரை சீண்டியிருப்பாரா அல்லது கட்சி தான் துவங்கியிருப்பாரா? இவரெல்லாம் எங்கள் தலைவரை சீண்டும்போது தான் எங்கள் தலைவர் மீது வருத்தமாக இருக்கிறது” என்றார்கள்.