கேரளாவைச் சேர்ந்த 22 வயது பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு வரன் பார்ப்பதற்காக மேட்ரிமோனியில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு, சுய விவரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த மணிகண்ட சாய்(24) என்பவர் மேட்ரிமோனியில் கேரள பெண்ணின் சுய விவரத்தைப் பார்த்துள்ளார். மேலும், அதிலிருந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்ட மணிகண்ட சாய், தான் பி.டெக் முடித்துவிட்டு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாகப் பேச்சைத் தொடங்கியுள்ளார்.
இப்படியாகப் பேச்சைத் தொடர்ந்த மணிகண்ட சாய், அந்த பெண்ணிடம் “உங்களை எனக்குப் பிடித்துள்ளது, நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? எனக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் மணிகண்ட சாயிடம் அவரது புகைப்படத்தைக் கேட்க அவரும் அனுப்பி வைத்திருக்கிறார். இதில் மேட்ரிமோனியில் முகப்பு படத்தில் மணிகண்ட சாய் அவரது புகைப்படத்தை வைக்காமல் வேறு இளைஞரின் புகைப்படத்தை வைத்துள்ளார். அதனால் அந்த இளைஞரின் புகைப்படத்தையே கேரள பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம் கேரள பெண்ணிற்குப் பிடித்துப்போக ஒன்றரை வருடங்களாக இருவரும் கைப்பேசியில் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஒருநாள் அந்த கேரள பெண்ணிடம் தனது தாய் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவச் செலவுக்கு ரூ. 3.50 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் அழுத நிலையில் கேட்டுள்ளார். அந்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ளத்தானே போகிறோம் என்று நம்பி, ரூ. 3.36 லட்சத்தை மணிகண்ட சாய் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட மணிகண்ட சாய், அந்த பெண்ணிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் அழைப்பிற்கு மணிகண்ட சாய் பதிலளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் பெண்ணிற்குச் சந்தேகம் எழவே, மணிகண்ட சாய்க்கு தொடர்ந்து தொலைப்பேசியில் அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்துள்ளார். பின்பு தொலைப்பேசி அழைப்பை எடுத்த மணிகண்ட சாயிடம், தன்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுங்க என்று கேட்க, பணத்தை எல்லாம் திருப்பித் தரமுடியாது என்று கூறிய மணிகண்ட சாய், உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது, அதனை மார்ஃபிங் செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கேரளப் பெண் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்ட சாயின் தொலைப்பேசி எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்ட சாய் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் மேட்ரிமோனியில் வேறு ஒருவரின் புகைப்படத்தை வைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா விரைந்த போலீஸ், மணிகண்ட சாயை கைது செய்து சென்னை அழைத்து வந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்துள்ளதும், நிறைய பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து தொலைப்பேசியில் வைத்திருந்தது தெரியவந்தது.