கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அரசு பள்ளிகளில் பயிலும்1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவுபடுத்தினார்.
இத்திட்டத்தை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் இது போன்ற திட்டத்தை செயல்படுத்த தெலங்கானா மாநில அரசு ஆர்வம் தெரிவித்திருந்தது. அதற்காக தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் வந்து பார்வையிட அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தெலங்கானா மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சரின் தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட தெலங்கானாவிலிருந்து மூத்த அரசு அதிகாரிகள் கடந்த 30 ஆம் தேதி சென்னை வந்திருந்தனர்.
அப்போது திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் கண்ட தெலங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை பற்றியும் அது செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் கூறுகையில் “இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தெலங்கானா மாநில அரசு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 10 பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தசரா பரிசாக இத்திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.