கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிவாஜி நகரில் ஐஎம்ஏ குரூப் ஆப் கம்பெனி என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மன்சூர் குறுகிய காலத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.
சுமார் 400 கோடி வரை பணம் வசூலித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக அவர் தலைமறைவானதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒன்றுதிரண்டு ஐஎம்ஏ நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அவர் மீது கடந்த இரண்டு நாட்களில் 25,000 பேர் புகார் அளித்துள்ளார். இதில் மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 1500 கோடி அளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கோடி அளவில் மோசடி நடந்திருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், அதை விட பல மடங்கு தொகை மோசடி நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக நகைக்கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர் மன்சூர் துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு லுக்கவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.