Skip to main content

யோகி ஆதித்யநாத்தின் கோஷம்; கூட்டணிக் கட்சிகளுக்குள் கிளம்பும் எதிர்ப்பு!

Published on 15/11/2024 | Edited on 15/11/2024
Opposition to Yogi Adityanath in Maharashtra

மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் மகா யுதி கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், புதிதாக ஆட்சியை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் வரும் 20ஆம் தேதி நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்காக பல்வேறு மாநில பா.ஜ.க முதல்வர்கள், எம்.பிக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிராவில் ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும் போது, ‘பட்டேங்கே தோ கட்டங்கே’ (பிரிந்தால் இழப்பு) என்ற கோஷத்தை அடிக்கடி எழுப்பி வருகிறார். இந்த கோஷத்தை, பிரதமர் மோடியும் உபயோகித்து வருகிறார். இந்த கோஷம், இந்துக்களின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைக்கும் கோஷமாக கருதப்படுகிறது. இந்த கோஷத்திற்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த கோஷத்தை மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் யோகி ஆதித்யநாத்துக்கு, மகாராஷ்டிராவில் ஆளும் மகா யுதி கூட்டணியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார், தேர்தல் பிரச்சாரப் பேரணியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? யாராவது ஏதாவது சொன்னால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். சமீபத்தில், ‘படேங்கே தோ கேட்டேங்கே’ (பிரிந்தால் இழப்பு) என்று ஒருவர் சொன்னார். இந்த வகையான பேச்சை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இது வடக்கில் வேலை செய்யும் ஆனால் மகாராஷ்டிராவில் இந்த விஷயங்கள் வேலை செய்யாது. மகாராஷ்டிரா பார்ப்பனர்கள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின்மாநிலம். அவர்களின் கொள்கைகளின்படி அரசு இயங்குகிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்