Skip to main content

தலைவர்கள் மறுப்பு; இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைப்பு!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Leaders refuse; Adjournment of the consultative meeting of the India Alliance

 

அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதற்கிடையே, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போடப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதே போல், மிசோரம் மாநிலத்தில் ஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 

 

இந்த நிலையில், 4 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (06-12-23) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

 

அதே போல், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி கூறுகையில், “எங்கள் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை. அவரது வழிகாட்டுதலின்படி, சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால்யாதவ் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்” என்று தெரிவித்தார். 

 

இதற்கிடையே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டார். மேலும், சில தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால், டிசம்பர் 3வது வாரத்தில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்