தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 80- க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 பேருக்கு இதுவரை ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் அறிகுறியோடு வந்த நைஜீரியைவைச் சேர்ந்த சிலரின் மாதிரிகள் பெங்களூருக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒமிக்ரானை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு விதித்தல், பெரிய கூட்டங்களை கட்டுப்படுத்துதல், கரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பொதுவாக ஊரடங்கை அமல்படுத்துவதை காட்டிலும் மாநில அரசு சூழ்நிலைக்கு ஏற்பட அதனை முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.