கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. 33 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு, ஊருக்குள் புகுந்தது. இதில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர். 5,645 முகாம்களில் 12.47 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 32 பேரை காணவில்லை. 776 கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில இடங்களில் வெள்ளநீர் வற்றி உள்ளது. மழை தற்போது குறைந்துள்ளதால் மீட்பு பணிகளில் முப்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்கை மெல்ல திரும்பி வருகிறது.