காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசியல் சாசனத்தின் பிரிவு 370, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. சீனாவின் ஆதரவோடு பிரிவு 370 மீண்டும் அமலுக்கு வரும் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஃபரூக் அப்துல்லா தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கரண்சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஃபரூக் அப்துல்லா கூறிய கருத்து அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வீட்டுக் காவலில் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக ஃபரூக் அப்துல்லா இவ்வாறு பேசுகிறார் என்று நினைக்கிறேன். இத்தகைய கருத்துகள் காஷ்மீர் மக்களிடம் தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஃபரூக் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் இணைந்து செயல்பட வேண்டும். அதுதான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.