Skip to main content

கணவனால் அலறிய இளம்பெண்! - நள்ளிரவில் பறிபோன இரு உயிர்! 

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Odisha woman Basanti passes away by snake ganesh patra arrested by police

 

ஒடிஷா மாநிலம், கஞ்சம் மாவட்டம், அதீபரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(25). இவருக்கும் பாசந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத்  தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இவர் குடும்பத்தோடு அதீபரா கிராமத்தில் வசித்து வந்துள்ளார். 

 

இந்நிலையில் இவரது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தை ஆகிய இருவரையும் கடந்த அக்.7ம் தேதி அதிகாலை பாம்பு கடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கணேஷ் பத்ரா, தனது மனைவியின் தந்தைக்கு விஷயத்தை தெரிவித்துவிட்டு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவி மற்றும் குழந்தையை அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், பாசந்தியின் தந்தை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும், தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக கபிசூரிய நகர் போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற கபிசூரிய நகர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் துவங்கினர். மேலும், மர்ம மரணம் என்பதால் பாசந்தி மற்றும் அவரது மகள் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பிரேதப் பரிசோதனையிலும் இருவரும் பாம்பு கடித்ததாலே இறந்துள்ளனர் என்பது தெரியவந்தது. 

 

போலீஸ் விசாரணையில் பாசந்தியின் தந்தை, தனது மருமகன் கணேஷ் பாத்ரா மீது சந்தேகம் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள், அவர் கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் கணேஷ் பாத்ராவை விசாரிக்க துவங்கினர். மேலும், அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவரது செல்போனில் இருந்த சிம் கார்டு, அவரின் தந்தை பெயரில் வாங்கியிருப்பது தெரியவந்தது. பிறகு அந்த எண்ணில் இருந்து அந்தப் பகுதியில் பாம்பு பிடிக்கும் பல நபர்களுக்கு அவர் போன் செய்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கணேஷ் பாத்ராவிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட்னார். 

 

அந்த விசாரணையில், “எனக்கும் என் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. அவர் என் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரதட்சணை புகார் கொடுத்தார். இந்நிலையில், என் மனைவியை கொல்வதற்கு முடிவு செய்தேன். அதன் காரணமாக கடந்த செப்டம்பர் 26ம் தேதி என் தந்தையின் பெயரில் ஒரு சிம் கார்டு வாங்கி அதில் இருந்து எங்கள் பகுதியைச் சுற்றி இருக்கும் பாம்பு பிடிப்பவர்களுக்கு தொடர்புகொண்டு சிவன் கோயிலில் சிவ பூஜை செய்ய பாம்பு வேண்டும் என கேட்டேன். 

 

Odisha woman Basanti passes away by snake ganesh patra arrested by police

 

அப்போது பசந்த ஆச்சார்யா எனும் நபர், கடந்த அக். 6ம் தேதி ஒரு குடியிருப்பு பகுதியில் பிடித்த நாகப் பாம்பை, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். அதனை அன்று இரவே என் வீட்டிற்கு எடுத்து சென்று அதை மறைத்து வைத்தேன். வீட்டில் உள்ளே இருக்கும் அறையில் என் மனைவியும் மகளும் உறங்குவார்கள். நான் வெளியே இருக்கும் அறையில் உறங்குவேன். அதனை பயன்படுத்தி, அக். 7ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வீட்டில் மறைத்து வைத்திருந்த பாம்பை எடுத்து, என் மனைவி தூங்கும் அறைக்குள் விட்டுவிட்டு, கதவுகளை மூடிவிட்டேன். பிறகு அதிகாலை வீட்டில் இருந்து கூச்சலிட்டேன். அப்போது அக்கம்பக்கத்தினர் வந்து மனைவி மற்றும் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” என்று தெரிவித்துள்ளார். 

 

பசந்த ஆச்சார்யா, கணேஷ் பாத்ராவின் கொலை திட்டம் தெரியாமல் சிவ பூஜைக்கென பாம்பு கொடுத்ததால் அவர் மீது இதுவரை வழக்கு ஏதும் பதியவில்லை எனவும் அதேசமயம், பிடிக்கப்பட்ட பாம்பை வனத்துறையிடம் கொடுக்காமல் தனிநபரிடம் கொடுத்ததால் அவர் மீது வனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. 

 

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் அவர் கொடுத்த வரதட்சணை புகாரைத் தொடர்ந்து கணவர் திட்டமிட்டு தனது மனைவி மற்றும் இரண்டரை வயது மகளை இறக்கமே இல்லாமல் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்