ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற அம்மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2021 ஆம் ஆண்டு பதிவான வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டு 52 நாட்களாக சிறையில் உள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அண்மையில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி, அவரது மகனும், கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் உட்படத் தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக சிறையில் இருந்து கொண்டே சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
அதே சமயம் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் இன்று (31.10.2023) உத்தரவிட்டுள்ளது.