Skip to main content

"மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது" - அரசு கொறடா அனந்தராமன் கோரிக்கை!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

puducherry assembly floor test mlas arrived assembly

 

மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி சட்டப்பேரவை. இதில் 30 உறுப்பினர்கள் மக்களால் சேர்ந்தெடுக்கப்படுவர். மற்ற மூன்று உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் ஆவர்.  இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வெங்கடேசன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

 

இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதையடுத்து, காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி, சட்டப்பேரவையில் இன்று (22/02/2021) பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்புக் கூட்டம் நடத்தப்படுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

 

அதன்படி. இன்று காலை 10.00 மணியளவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சுயேச்சை, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்களா? இதுகுறித்து சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

puducherry assembly floor test mlas arrived assembly

 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் சட்டப்பேரவை அரசு கொறடாவுமான ஆர்.கே.ஆர். அனந்தராமன் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக என்னை எதிர்த்து போட்டியிட்டு 147 வாக்குகளே வாங்கி தோல்வியடைந்த தங்க.விக்ரமன் நியமன எம்.எல்.ஏவாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் வாக்களிக்களிப்பதும், மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் வாக்களிப்பதும் மக்களாட்சிக்கு எதிரானது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. எனவே, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் வலியுறுத்துவோம். நாங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறோம். எதிரணியில் குறைவாக இருக்கிறார்கள். நாங்கள் வெற்றிபெறுவோம்" என்றார்.

 

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கலாம் என உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழக்கும். எனவே நாராயணசாமி பெரும்பான்மை இழப்பதற்கு முன்னதாகவே தமது பதவியை ராஜினாமா செய்வது நல்லது"  என்றார்.

 

பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் அரசு தப்பிக்குமா? கவிழுமா? என புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.