2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற எம்.பி.க்கள் 141 பேர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் டிசம்பர் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும். எங்களின் இலக்கு வெற்றிதான். தேர்தல் வெற்றிக்குப் பிறகுதான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பி.க்கள் இருப்பார்கள். அதன்பின் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.