காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்திற்காக தற்காலிகமாக முடக்கப்பட்டது. பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்தது.
இதன்தொடர்ச்சியாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, "ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் நமது அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் நமது அரசியலை வரையறுக்க தனது வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறது. ஒரு அரசியல்வாதியாக நான் அதை விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல். ட்விட்டர் நடுநிலையானது அல்ல ஒரு சார்புடையது என தெரிந்துள்ளது. அன்றைக்கு ஆட்சியில் உள்ள அரசு சொல்வதைத்தான் ட்விட்டர் நிறுவனம் கேட்கிறது" என கடுமையாக விமர்சித்தார்.
இந்தநிலையில், இன்று (14.08.2021) ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு உட்பட முடக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இதனை உறுதிப்படுத்தியுள்ள காங்கிரஸ் சமூகவலைதள பொறுப்பாளர், “கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் தங்களது புகைப்படத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளித்த கடிதத்தை ராகுல் காந்தி சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அவரது கணக்கு மீண்டும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.