மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு 8வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அரசைக் கடுமையாகச் சாடிய மேற்கு வங்க உயர்நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா கொல்கத்தாவில் பேரணி நடத்தினார். இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மம்தா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களைத் தவறாக நடத்த முயற்சிக்கிறார். மறுபக்கம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே போராட்டமும் நடத்துகிறார். மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சூழ்நிலையைக் கையாள தெரியாததால் மம்தா தனது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் மூலம் விரைவாகத் தண்டனை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டாத வரை நாட்டின் பல பகுதிகளில் தினந்தோறும் இதுபோன்ற கொடூரங்கள் நடந்துகொண்டே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்குக் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குக் கழித்துக் கடந்த 2020 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவர், நிர்பயா போன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.