டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இம்மாதம் 22ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இதில் முகேஷ் சிங் என்ற குற்றவாளி சார்பில், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. ஆனால் குடியரசுத்தலைவர் இந்த கருணை மனுவை நிராகரித்தார்.கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு பின்னர்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் திஹார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![nirphaya case](http://image.nakkheeran.in/cdn/farfuture/NYl_kAR0ru7AEOaxfVYLmA8EusV3-Oyi-pKqaijQbx8/1579945881/sites/default/files/inline-images/365_0.jpg)
இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்துக்கு தண்டனை குறித்து கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் குற்றவாளிகளிடம் அவர்களின் கடைசி ஆசை என்ன எனக் கேட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை எனத் தெரிகிறது. மரண தண்டனை குற்றவாளிகள் தங்களது குடும்ப உறுப்பினரை கடைசி நேரத்தில் சந்திக்க சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல குற்றவாளிகள் தங்களது சொத்துக்களை யாருக்கு கொடுக்க விரும்புகிறார்கள் எனவும் தெரிவிக்கலாம். ஆனால், நிர்பயா குற்றவாளிகள் கடைசி ஆசையை தெரிவிக்காமல் இருக்கிறனர். தண்டனை நாளுக்கு இன்னும் சிறுது நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடைசி ஆசையை கூறாமல் இருந்தால், கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருப்பதாக கூறிவருகின்றனர்.