இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்துவருகிறது. அதேநேரத்தில் கரோனா மூன்றாவது அலை ஏற்படுமென நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், நேற்று (16.07.2021) செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் வி.கே. பால், கரோனாவிற்கெதிரான போரில் அடுத்த 125 நாட்கள் முக்கியமானவை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "கரோனா பாதிப்புகள் குறையும் வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு எச்சரிக்கை சமிக்கை. இந்தியாவில் கரோனாவிற்கெதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் முக்கியமானவை" என தெரிவித்துள்ளார். மேலும் அவர், “நாம் இன்னும் கூட்டு நோயெதிர்ப்பு சக்தி நிலையை அடையவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்துப் பேசிய டாக்டர் வி.கே. பால், "ஜூலை மாதத்திற்குள் 50 கோடி டோஸ்களை செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி நகர்கிறோம். அதை அடைவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம். அரசு 66 கோடி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் டோஸ்களை ஆர்டர் செய்துள்ளது. கூடுதலாக 22 கோடி டோஸ்கள் தனியாருக்குச் செல்லும்" என கூறியுள்ளார்.