நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறையின் பழி வாங்கும் போக்கை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 3 தினங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புதுச்சேரி காங்கிரஸார் ஊர்வலம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் முற்றுகையிடும் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்ட ஊர்வலம் ஆளுநர் மாளிகை அருகே வந்தபோது போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர். ஆனால், காங்கிரஸார் தடுப்புகளின் மீது ஏறி முற்றுகையிட முயன்றதால் காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து முற்றுகையிட முயன்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.