இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,127 ஆக உயர்ந்துள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் புதிதாக கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், இந்திய மக்களிடையே கரோனா குறித்த அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே மூவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். இந்நிலையில், இந்தியாவில் மேலும் நான்கு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.