உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் தீரத் சிங் ராவத். உத்தரகாண்ட் மாநில பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், மாநில முதல்வராக்கப்பட்டார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையாகிவுள்ளது.
தற்போது ரிப்புடு ஜீன்ஸ் (ripped jeans) என்ற கிழிந்த ஜீன்ஸ் உடுத்துவது ஃபேஷனாகவுள்ளது. இந்தநிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய தீரத் சிங் ராவத், தொண்டு நிறுவனம் நடத்திவரும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் எனக் கூறினார். தொடர்ந்து அவர், இதுபோன்ற ஆடை அணியும் ஒரு பெண் வெளியில் சென்று மக்களைச் சந்தித்து, அவர்களது குறைகளை தீர்த்தார் என்றால், இந்தச் சமூகத்திற்கும், நமது குழந்தைகளுக்கும் நாம் என்ன மாதிரியான செய்தியை வழங்குகிறோம் எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும்தீரத் சிங் ராவத், "இவையெல்லாம் வீட்டிலேயே தொடங்குகிறது. நாம் என்ன செய்கிறமோ, அதை அப்படியே நமது குழந்தைகள் செய்யும். வீட்டில் சரியான கலாச்சாரம் கற்றுக்கொடுக்கப்பட்ட குழந்தை, எவ்வளவு நாகரீகமாக மாறினாலும் வாழ்க்கையில் தோற்கமாட்டான்" எனக் கூறினார்.
தீரத் சிங் ராவத்தின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றது. உடை அணிவது அவரவர் விருப்பம் என்றும், உடையை வைத்து ஒருவரை மதிப்பிடக்கூடாது என தீரத் சிங் ராவத்தின் பேச்சுக்குப் பலரும் பதிலளித்து வருகின்றனர். மேலும் அமிதாப் பச்சன் பேத்தி உட்பட பல பெண்கள், கிழிந்த ஜீன்ஸ்களோடு இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றி தீரத் சிங் ராவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.