
டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் கெஜ்ரிவால் தீர்மானத்தை தாக்கல் செய்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
சில நாட்கள் முன்பு தனது கட்சி எம்.எல்.ஏ களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளையும் பாஜக செய்வதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் இரண்டாம் நாளாக கூடியது. அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என பதாகைகளை தூக்கி வந்தனர். அதே நேரத்தில் டெல்லி துணை ஆளுநர் வினய்குமார் சக்சேனா பதவி விலக வேண்டும் என ஆளும்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன் மொழிந்தார். அந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும் என்பதால், 70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு 62 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவிற்கு 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு வாக்களிப்பார்களா என டெல்லி அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.