இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இருந்தபோதிலும், கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி முக்கியமானதாக இருக்கிறது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் இதன் வயது வரம்பு 45 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் ஆன்லைன் மூலமாக முதலில் பதிவுசெய்ய வேண்டும். அதன் பிறகே அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான முன்பதிவு இன்று (28.04.2021) மாலை 4 மணி முதல் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்கும் நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்டோர், ஆன்லைன் மூலம் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் www.cowin.gov.in எனும் இணையதளத்திலும், ஆரோக்கிய சேது செயலி மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில் முன்பதிவு செய்யும்போது பெயர், தொலைபேசி எண், அரசு அங்கீகரித்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றைப் பதிவேற்றி, தங்கள் அருகில் உள்ள அரசு அல்லது தனியார் கரோனா தடுப்பூசி மையங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர், ஒரே நேரத்தில், தன் குடும்ப உறுப்பினர் நான்கு பேருக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், பதிவுசெய்த பின்பு நேரம், இடம் ஆகியவற்றை மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.