அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ராகிங் போன்றவற்றை தடுக்க வகுப்பறை மற்றும் விடுதிகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் யுஜிசி அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது...
ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரிகளிலும், விடுதிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும். ராகிங் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அரசின் இணையதளத்தில் அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் ராகிங் தடுப்பு உறுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் ராகிங் தடுப்பு குறித்தான விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்ட வேண்டும்.
பேராசிரியர்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.ராகிங்கில் ஈடுபட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் கல்லூரி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை பாயும். ராகிங் தடுப்புக்கான தொலைபேசி எண் 18001805522 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.