நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் பவாரின் இந்த திடீர் கூட்டணியை சிவசேனாவின் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் இந்த ஆட்சியமைப்பு குறித்து பேசியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், "கட்சி கூட்டத்திற்கு வந்த எம்எல்ஏக்களின் வருகை பதிவை, பாஜவுக்கு ஆதரவாக காட்டி அஜித் பவார் மோசடி செய்துவிட்டார்" என குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.