சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராகவோ, அவர்களை அச்சுறுத்தும் வகையிலோ யாரேனும் நடந்துகொண்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் உட்பட, இந்தியக் குற்றவியல் சட்டங்களின் மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். .
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 18,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சுகாதார பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் இந்தச் செயல்களைத் தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
அதன்படி, சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராகவோ, அவர்களை அச்சுறுத்தும் வகையிலோ யாரேனும் நடந்துகொண்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் உட்பட, இந்தியக் குற்றவியல் சட்டங்களின் மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "கரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்கும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் (தனியார் மற்றும் பொது) குடும்பங்களுக்கும் ரூ.50 லட்சம் வழங்கப்படுவதை இந்திய அரசின் முயற்சியுடன் மாநில அரசு ஒருங்கிணைக்கும்.
அரசு அவர்களைத் தியாகிகளாகக் கருதி, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் இணையற்ற தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கப்படும். அவர்களுக்கு எதிரான எந்தவொரு செயலும் அரசுக்கு எதிரான செயலாகவே கருதப்படும். சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராகவோ, அவர்களை அச்சுறுத்தும் வகையிலோ யாரேனும் நடந்துகொண்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் உட்பட, இந்தியக் குற்றவியல் சட்டங்களின் மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.