பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்னம் தொடர்பாக தங்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார்.
தேர்தல் வரி கட்டியுள்ளதோடு அனைத்து தேர்தல்களிலும் தாங்கள் பங்கேற்றுள்ளதால் தங்களுக்கே அந்த சின்ன ஒதுக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.
வரும் 26 ஆம் தேதி அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக இன்று அல்லது நாளைக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். அதில், 'சின்னம் தொடர்பான தங்களது வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை காலை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.