பல்வேறு எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் (08/08/2022) முடிவுக்கு வந்தது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், எம்.பி.க்களின் உறுப்பினர்களின் கேள்விக்கும் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டுமென எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, மக்களவை மழைக்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. மாநிலங்களவையின் இன்றைய அமர்வு இறுதி அமர்வு என அறிவிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தான், நாடாளுமன்றத்தில் இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.