இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. விசாரணை குழுவானது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு இந்திய விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்த போது, உடனடியாக வீராங்கனைகளின் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தது. இதையடுத்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரிஜ்பூஷண் சரண் சிங், “ராஜினாமா செய்வது பெரிய விஷயம் இல்லை ஆனால் நான் குற்றவாளி அல்ல. நான் ராஜினாமா செய்தால், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தம் ஆகிவிடும். எனது பதவிக்காலம் கிட்டத்தட்ட அடுத்த மாதம் முடிவடைகிறது. மேலும், மூன்று பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது, இன்னும் 45 நாட்களில் தேர்தல் நடத்தப்படும், தேர்தலுக்குப் பிறகு எனது பதவிக்காலம் முடிவடையும். ஒவ்வொரு நாளும் மல்யுத்த வீரர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். எப்.ஐ.ஆர். பதிவு செய்து என்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும், அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். எனது தொகுதி மக்களால் நான் எம்பி ஆனேன், வினேஷ் போகட்டால் அல்ல. ஹரியானாவின் 90 சதவீத மல்யுத்த வீரர்களும் என்னுடன் உள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பிற்கு முன், அவர்கள் என்னைப் புகழ்ந்து, அவர்களின் திருமணங்களுக்கு என்னை அழைத்தார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர், என் ஆசிர்வாதத்தைப் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளாக எந்த காவல் நிலையத்திலும், பாலியல் ரீதியாக எந்த விளையாட்டு அமைச்சகத்திலும் அல்லது கூட்டமைப்பிலும் புகார் செய்யவில்லை. இந்த சர்ச்சையின் பின் யார் உள்ளார்கள் என்பது இப்போது தெரிந்துவிட்டது. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சில தொழிலதிபர்களும் காங்கிரஸும் இருப்பதாக நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். இது மல்யுத்த வீரர்களின் போராட்டம் அல்ல. சதிகாரர்களின் போராட்டம்” எனக் கூறினார்.