மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் என 8000 வி.ஐ.பி க்கள் பங்கேற்க உள்ளனர்.
குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதன் மூலம் குடியரசு தலைவர் மாளிகை வரலாற்றிலேயே நடக்கும் மிகப்பெரிய விழாவாக இது மாறியுள்ளது. 8000 வி.ஐ.பி க்கள், மற்ற பங்கேற்பாளர்கள் என சுமார் 10,000 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவ், மியான்மர் அதிபர் யு வின் மின்ட், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, பூடான் பிரதமர் டாக்டர் லோடே ஷெரிங் மற்றும் தாய்லாந்து சிறப்பு தூதர் கிரிசாத பூன்ராக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள், பி.டி.உஷா, ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், சாய்னா நெவால், தீபா கர்மாகர் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களுக்கும், ஷாருக் கான், சஞ்சய் லீலா பன்சாலி, கங்கனா ரணாவத், கரண் ஜோகர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.