
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி 2 முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 8 வது முறையாக நீட்டித்து வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக கடந்த 9 ஆம் தேதி புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அன்று மாலையே மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சூழலில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி கடந்த 14 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். அப்போது உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45 வது பிரிவு பொருந்தாது என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இன்று (19.10.2023) தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மருத்துவ காரணத்தை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாமீன்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். செந்தில் பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள ராம் சங்கர் என்பவர் மேல்முறையீட்டு ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஏற்கனவே நிறைய வழக்குகள் நாளைய தினம் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜாமீன் மனு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.