புதிய கல்விக் கொள்கையைத் தயார் செய்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர், மத்திய கல்வி அமைச்சகமாக மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பள்ளி முதல் பல்கலைக்கழக கல்வி வரை அனைத்தையும் தனது பொறுப்பில் வைத்திருக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மத்திய கல்வி அமைச்சகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், ராஜிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் அதன் பெயர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதுநாள் வரை அந்த பெயரிலேயே இயங்கி வந்த இந்த அமைச்சகம், தற்போது புதிய கல்விக் கொள்கையைத் தயார் செய்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மீண்டும் பெயர்மாற்றம் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலின்படி, இந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர், மத்திய கல்வி அமைச்சகமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதன் பெயர் தற்போது மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.