
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, ராகுல் காந்தி இன்று கோவா மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அவருக்கு அம்மாநில காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீனவ கிராமத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, மீனவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு நான்கு, ஐந்து தொழிலதிபர்களுக்கே பயனளிக்கிறது எனக் கூறியுள்ளார். மீனவர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது;உங்கள் இதயத்தில் உள்ளதைக் கேட்க விரும்புகிறேன். கோவாவின் நலனைப் பாதுகாக்கவும், அதன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காங்கிரஸ் விரும்புகிறது. உங்கள் நலனை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். கோவாவுக்குப் பயன் இல்லை என்றால், இம்மாநிலம் நிலக்கரி மையமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. என்னை உங்கள் குடும்ப உறுப்பினராக நடத்துங்கள். எனக்கு என் மீதான நம்பகத்தன்மை முக்கியம். நான் சொல்வதைச் செய்வேன்.
சத்தீஸ்கரில் நாங்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றினோம். பஞ்சாப், கர்நாடகாவிலும் அதை செய்தோம். நீங்கள் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எங்களின் தேர்தல் அறிக்கையில் என்ன இடம் பெற்றாலும் அது ஒரு உத்தரவாதம். வெறும் வாக்குறுதி மட்டுமல்ல.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், சர்வதேச எரிபொருள் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர் வரை உயர்ந்தது. இன்று, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நீங்கள் இன்னும் அதிகமாகக் கொடுக்கிறீர்கள். இன்று இந்தியா, உலகிலேயே அதிக விகிதத்தில் எரிபொருளுக்கு வரி விதிக்கிறது.நீங்கள் கவனமாகப் பார்த்தால், 4-5 தொழிலதிபர்கள் இதன் மூலம் பயனடைகிறார்கள் என்பது புரியும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.