காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 139வது ஆண்டையொட்டி இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெங்களூரில் காங்கிரஸ் 139வது நிறுவன தின நிகழ்ச்சி இன்று (29-12-23) நடைபெற்றது. அதில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும். இந்த நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. அதற்கு ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து போராடி காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்காமல், இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மென்மையான இந்துத்துவம் என்ற அரசியல் தந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மென்மையான இந்துத்துவம் என்றால் என்ன? கடுமையான இந்துத்துவம் என்றால் என்ன?
என்னை பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான். பா.ஜ.க.வினர் மட்டும்தான் இந்துக்களா? நாம் இந்துக்கள் இல்லையா. இந்துத்துவம் என்பது வேறு, இந்து என்பது வேறு. பா.ஜ.க.வினர் மட்டும்தான் ராமருக்கு கோவில் கட்டுகிறார்களா? நாம் கட்டவில்லையா? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த யாரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. தேசியவாதம் மற்றும் தேசபக்தி என்ற பெயரில் பா.ஜ.க தலைவர்கள் பரப்பும் பொய் செய்திகளை காங்கிரஸ் தலைவர்கள் அம்பலப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.