பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பாதுகாப்பு குறைபாடு என மத்திய அரசும், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பஞ்சாப் அரசை விமர்சித்து வருகின்றன. அதேநேரத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படவில்லையென்றும், அவர் பங்கேற்கவிருந்த கூட்டத்திற்கு கூட்டம் சேராததால், அவர் திரும்பி சென்றதாக கூறினார்.
இதற்கிடையே பிரதமர் செல்லும் பாதை மறிக்கப்பட்டிருப்பது குறித்து எஸ்.பி.ஜிக்கு (சிறப்பு பாதுகாப்பு குழு) தெரியாமல் போனது எப்படி?, பாகிஸ்தானையொட்டியுள்ள ஒரு மாநிலத்தில் 100 கிலோமீட்டர் தொலைவு வரை பிரதமரை காரில் பயணிக்க எஸ்.பி.ஜி அனுமதித்தது எப்படி? என பலர் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் பஞ்சாப் அரசு, பிரதமர் பயணம் செய்த வழி மறிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்தநிலையில் உள்துறை அமைச்சகமும் பிரதமர் பயணித்த வழி மறிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைச்சரவை செயலகத்தின் செயலாளரின் (பாதுகாப்பு) தலைமையில், ஐபி இணை இயக்குனர் பல்பீர் சிங், எஸ்.பி.ஜியின் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. மேலும் விரைவில் பிரதமர் பயணித்த வழி மறிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அறிக்கை அளிக்கும்படியும் அக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.