மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 13வது நாளாக, இன்றும் (08.12.2020) விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தநிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் பங்கேற்பதற்காக, கடந்த மாதம் 23-ஆம் தேதி திருச்சியில் இருந்து ரயிலில் புறப்பட முயன்றார். அப்போது போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதையடுத்து, இரண்டாவது முறையாக டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணுவை, கடந்த புதன்கிழமை திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை வீட்டுக் காவலில் வைத்தனர்.
இந்தச் சூழலில், நேற்று (07.12.2020) காலை நிருபர்களுக்குப் பேட்டியளித்த அய்யாக்கண்ணு, "போலீசார் தன்னை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், டெல்லிக்குச் சென்று விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன்" என்றும் உறுதிபடக் கூறினார். இந்நிலையில், நேற்று மாலை, போலீஸ் கண்காணிப்பையும் மீறி அய்யாக்கண்ணு, அவரது வழக்கறிஞருடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதையறிந்த டெல்லி காவல்துறையினர், அய்யாக்கண்ணுவை கைதுசெய்து, காலை 11 மணி முதல் தற்போது வரை, 'டெல்லி - கரோல் பார்க்' காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.