இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மைத்தேயி சமூக மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறி இருக்கும் நிலையில், அவர்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது ஏற்கனவே நலிவடைந்து இருக்கும் பழங்குடியின மக்களை மேலும் பாதிக்கும் எனும் கருத்து அப்பகுதியில் பரவலாக மேலெழுந்தது.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் கூட்டம் மூலம் கலவரத்தை தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும்’ என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். மேலும் மணிப்பூர் மாநிலக் கலவரம் குறித்துப் பேச 10 எதிர்க்கட்சிகள் சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து மணிப்பூர் கலவரத்தைத் தடுக்க முடியாமல் மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகள் திணறி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் மணிப்பூரில் அமைதி திரும்ப பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி இருந்தனர். மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் அனைத்துக் கட்சி கூட்டம் இதுவாகும். மேலும் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று சந்தித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக வரும் 29 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார். இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.