நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதலாம் நாளான இன்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். சிஏஏ, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அயோத்தி தீர்ப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து குடியரசு தலைவர் அப்போது உரையாற்றினார்.
குடியரசு தலைவரின் இந்த உரை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "கடுமையான பொருளாதார சரிவை சமாளிக்க மத்திய அரசு என்ன யோசனை வைத்துள்ளது என்பதற்கான முகாந்திரத்தை நான் தேடினேன். ஆனால் அப்படி எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நாம் தொடர்ந்து கேட்டு வரும் அதே பழைய அர்த்தமற்ற கோஷங்கள் மற்றும் பழைய காது புளித்த வாசகங்களையும் மறுபடியும் நாம் இப்போதும் கேட்டிருக்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த உரையில், நுண்பொருளாதார நிலைமை குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. வேலை இழப்புகள், வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல் மற்றும் நுகர்வோர் விலை பணவீக்கம் ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. குறிப்பாக சிறுகுறு தொழில்துறையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்த ஒரு வார்த்தை கூட இல்லை. அதேபோல், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நடத்திய போராட்டங்களை பொருட்படுத்தாமல் அரசாங்கம் சிஏஏ மீதான தனது நிலைப்பாட்டை இதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக எதிர்ப்பை அரசாங்கம் நிராகரிப்பது போராட்டங்களை தீவிரப்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.