உத்தர பிரதேச மாநிலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி மங்காப்பூரில் இருந்து அயோத்திக்கு சரயு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் உத்தர பிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் பயணம் செய்து வந்துள்ளார். இந்த ரயில் அயோத்தி ரயில் நிலையத்திற்கு சென்றடைந்த போது, ரயிலை சுத்தம் செய்வதற்காக துப்பரவு பணியாளர் ஒருவர் பெண் போலீஸ் பயணித்து வந்த ரயில் பெட்டியில் ஏறினார். அப்போது, அங்கு அந்த பெண் போலீஸ் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர் அளித்த அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண் போலீசை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு பின் அவருக்கு சுயநினைவு திரும்பியதும், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர், “ரயிலில் பயணம் செய்த போது இருக்கை தொடர்பாக தனக்கும் அங்கு இருந்த 2 ஆண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த ஆண்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் தன்னை கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடி சென்றனர்” என்று கூறினார்.
இந்த செய்தி உத்தர பிரதேச ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் போலீஸின் சகோதரர் கொடுத்த புகாரில் அயோத்தி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், இது குறித்து அவர்கள் நடத்திய அந்த விசாரணையில் அனீஷ் கான் என்பவர் தான் பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து, அனீஷ் கானை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், அயோத்தியில் உள்ள பூரா கலந்தர் பகுதியில் அனீஷ் கான் தலைமறைவாக இருக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரை பிடிக்க காவல்துறையினர் நேற்று முன் தினம் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அனீஷ் கானையும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் சுற்றிவளைத்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் அனீஷ் கான் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அதில் அவரது கூட்டாளிகள் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரயிலில் பயணம் செய்த பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் காவல்துறையினர் என்கவுண்டரில் இறந்திருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.