இன்றைய அரசியல் சூழலில், வதந்திகள் எதிர்ப்பிற்கு அடிப்படையாகிவிட்டன எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார். இதில், ஹாண்டியா - ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையைத் திறந்து வைத்துப் பேசிய மோடி, "வாரணாசியில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து செயல்படுத்தப்படாத பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க, புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், சாலைகளை அகலப்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வரானதிலிருந்து, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது. மாநிலத்தில், 12 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வாரணாசியில் சரக்கு மையத்தை நிறுவுவதன் மூலம், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாகச் சேமித்து விற்க வசதி கிடைத்துள்ளது. இந்த சேமிப்பு திறன் காரணமாக, முதல்முறையாக, இங்குள்ள விவசாயிகளின் விளைபொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுவாமிநாதன் கமிஷனின் படி விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்குறுதி காகிதத்தில் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. முன்பெல்லாம், அரசின் முடிவுகள் எதிர்க்கப்பட்டன. ஆனால், இப்போது வதந்திகள் எதிர்ப்பிற்கு அடிப்படையாகிவிட்டன. விவசாயிகளின் நலனுக்காகப் புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்டங்களின் நன்மைகளை, நாம் வரும் நாட்களில் காண்போம், அனுபவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.